கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நம்பியூர்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கான்கிரீட் பணி
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருப்பது கீழ்பவானி வாய்க்கால். இந்த வாய்க்காலில் கான்கிரீட் கரை மற்றும் தளம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெருந்துறை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகள் எதுவும் செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒன்று திரண்டு சென்று கரை அமைக்கும் பணியை நிறுத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
மேலும் தொடர்ந்து அங்கு பணி நடந்துவிடக்கூடாது என்பதற்காக காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 3-வது நாளும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் கூறும்போது, 'பெருந்துறையில் உண்ணாவிரதம் இருந்தபோது அமைச்சர் முத்துசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திருமூர்த்தி ஆகியோர் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டம் நிறுத்தப்படும். கிளை வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்து அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். அதற்காக மட்டுமே தற்போது வேலைகள் செய்யப்படுகிறது என்றனர். அதனால்தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முதல்-அமைச்சர் தலையிடவேண்டும்
ஆனால் தற்போது எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் வாய்க்காலின் 4 பக்கங்களிலும் மிக ஆழமாக பள்ளம் தோண்டி கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். கசிவு நீர் குட்டைக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும்.
கடத்தூர், கரட்டுப்பாளையம், குருமந்தூர், கூடக்கரை, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் கசிவு நீர் குட்டை மூலமே பாசன வசதி பெறுகின்றன. கான்கிரீட் சுவர் எழுப்பினால் இந்த 3 ஆயிரம் ஏக்கரிலும் விவசாயம் செய்ய முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க வேண்டும். 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை அதிகாரிகள் எங்களை வந்து சந்திக்கவில்ைல' என்றனர்.