"ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்" - ஜெயக்குமார் பேச்சு

சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-07-25 08:33 GMT

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசை கண்டித்து, சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக, அ.தி.மு.க. அமைப்பு சார்பில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.

பெண்களுக்கு உதவித் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட தி.மு.க. அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த அரசு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊர்தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச்சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணமில்லை என்கிறது திமுக. விளம்பரம் மற்றும் கருணாநிதி புகழுக்காக மட்டுமே கோடி கோடியாக செலவு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்த கேள்விக்கு, "ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்" என்று ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்