தொழில்நுட்ப கோளாறால் மதுரைக்கு தாமதமாக வந்த மும்பை விமானம்- ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பயணிகள் நீண்டநேரம் காத்திருப்பு
தொழில்நுட்ப கோளாறால் மதுரைக்கு வந்த மும்பை விமானம் தாமதமாக வந்ததால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.;
மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமான சேவை உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த நிலையில், நேற்று காலை 9 மணிக்கு மும்பையில் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை. இதனால் 12.30 மணிக்கு வரவேண்டிய விமானம் வரவில்லை. பின்னர் அந்த விமானம் 3.30 மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு மதுரை வந்தடைந்தது. இதனால் இந்த விமானத்தில் சென்னை வழியாக மும்பைக்கு பயணம் செய்ய காத்திருந்த 161 பயணிகள் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தை பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முன்பதிவு செய்து இருந்தார். விமானம் தாமதமாக வந்ததால் அவரும் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மாலை 5 மணிக்கு அதே விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.