ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி பெரியகுளத்தில் காலமானார்.

Update: 2023-02-24 17:06 GMT

தேனி, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22-ந் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரை நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். தாயாரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. பழனியம்மாள் நாச்சியாரின் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தை பெயர் ஓட்டக்காரத்தேவர். ஓட்டக்காரத்தேவர்-பழனியம்மாள் நாச்சியார் தம்பதிக்கு 5 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 9 பிள்ளைகள். அதில் ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகன் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்