விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர், மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர், மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-08 14:53 GMT

விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி அன்னபூரணி (வயது 42). இவர் வெங்கந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளைய மகன் தமிழரசனுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அன்னபூரணி கூறுகையில், எனது மூத்த மகன் அஜித்குமார், வி.புதுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர், எங்களிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடியாட்கள் மூலம் எனது மகன் அஜித்குமாரை தாக்கினார். அதோடு என்னிடமும் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். இதுபற்றி கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய போலீசார் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்