நர்சிங் மாணவி தற்கொலை:போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என பெற்றோருக்கு மிரட்டல்

நர்சிங் மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-08 18:45 GMT

நர்சிங் மாணவி தற்கொலை

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பகுதியில் வசித்து வந்த 18 வயதுடைய மாணவி, சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டில், அ.ம.மு.க. நகர செயலாளரும், வளவனூர் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலருமான கந்தன் (40) என்பவருடைய பாத்திரக்கடையில் பணிபுரிந்தார்.

அப்போது அவர், அம்மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அம்மாணவியை சென்னை சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து நர்சிங் படிக்க சேர்த்துள்ளனர். ஆனாலும் கந்தன், அம்மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று அம்மாணவி, தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெற்றோருக்கு மிரட்டல்

இதையறிந்த கந்தனின் உறவினரான வளவனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின்பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது பெற்றோரிடம், கந்தன் மீது போலீசில் புகார் ஏதும் கொடுக்கக்கூடாது என்று மிரட்டினார். இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் மாணவியின் சாவுக்கு காரணமான கந்தனை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு வளவனூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கந்தன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

2 பேர் மீது வழக்கு

இந்நிலையில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கந்தன், விஜயன் ஆகிய 2 பேர் மீதும், மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்