நர்சிங் கல்லூரி மாணவி பரிதாப சாவு

எருமப்பட்டியில் உள்ள கொக்கு பாறை ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.;

Update: 2022-10-18 18:50 GMT

எருமப்பட்டி

கல்லூரி மாணவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம்கோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (வயது 18) தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜீவிதா கல்லூரி முடிந்து தாயார் கவிதாவுடன் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர்கள் எருமப்பட்டி அருகே கொக்கு பாறை ஓடை பகுதியில் வந்தனர்.

அந்த ஓடையில் தண்ணீர் அதிகளவில் வந்ததால் மொபட்டை நிறுத்திவிட்டு அவர்கள் தண்ணீரில் நடந்து சென்றனர். அப்போது 2 பேரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றநிலையில் கவிதா அருகில் இருந்த செடியை பிடித்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் செடியை பிடித்திருந்த கவிதாவை பத்திரமாக மீட்டனர். ஜீவிதாவை ஓடை தண்ணீர் இழுத்து சென்றது. இதுகுறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற தீணைப்பு படை வீரர்கள் ஓடையில் இழுத்து செல்லப்பட்ட ஜீவிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணி வரை தேடியும் கிடைக்காத நிலையில் மீட்பு பணியை கைவிட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று காலை ஜீவிதாவை தேடும் பணியில் சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார், உதவி தாசில்தார் பாரதிராஜா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர்.

இந்த நிலையில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிங்களம் கோம்பை ஏரியில் தண்ணீர் வடிந்து செல்லும் கடகால் அருகே மாணவி ஜீவிதாவின் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஓடை நீரில் கல்லூரி மாணவி அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்