நர்சரி கார்டன் உரிமையாளர் சாவில் மர்மம் நீடிப்பு
கன்னியாகுமரி அருகே புதரில் பிணமாக கிடந்த நர்சரி கார்டன் உரிமையாளர் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
மேலகிருஷ்ணன்புதூர்:
கன்னியாகுமரி அருகே புதரில் பிணமாக கிடந்த நர்சரி கார்டன் உரிமையாளர் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நர்சரி கார்டன் உரிமையாளர்
நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கோபி (வயது21). இவர் டிப்ளமோ அக்ரி படித்து விட்டு ஈத்தாமொழி அருகே ஆடராவிளையில் நர்சரி கார்டன் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி மதியம் கோபி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபியை தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரியை அடுத்த சமாதானபுரம் அருகில் உள்ள ஒரு காட்டு பகுதியில் கோபி மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் பனியன் அணிந்திருந்த நிலையில் அவருடைய பேண்ட் மற்றும் உள்ளாடை அருகே ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் 'என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதி இருந்ததாக ெதரிகிறது.
கொலை செய்ததாக புகார்
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோபியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோபியின் தந்தை ரவி கூறுகையில், 'எனது மகன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்' என போலீசாரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே கோபியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் தேடினர். அப்போது மோட்டார் சைக்கிள் பிணம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நின்றது. அவரது செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை முடிவு
கோபி பிணமாக கிடந்த இடம் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் கோபி உடல் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர். ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கோபியின் நெருங்கிய வட்டாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.