கடலூரில் பரிதாபம்திருமணமான 3 மாதத்தில் நர்சு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை

கடலூரில் திருமணமான 3 மாதத்தில் நர்சு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-03-28 18:45 GMT


கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் சுசீத்ரா (வயது 29). இவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், வடலூரை சேர்ந்த ரகுமாறன் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. என்ஜினீயரான ரகுமாறன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக சுசீத்ரா, வண்ணாரப்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை, வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த சுசீத்ரா, ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சுசீத்ராவின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரகாஷ் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ரகுமாறன், சுசீத்ரா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி செல்போனில் வீடியோ கால் செய்து தொந்தரவு செய்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீத்ரா சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் அவரது சாவு குறித்து, கடலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணமான 3 மாதத்தில் நர்சு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்