தூத்துக்குடி துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்து 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சூறாவளி காற்று
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அன்றைய தினங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமின்றி காணப்பட்டது. கடும் வெயில் மக்களை வாட்டியது.
எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கூண்டு ஏற்றுவது வழக்கம். அதன்படி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.