"முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளோம் - இனி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்" - தமிழ்மகன் உசேன் பேட்டி
அதிமுக பொதுக்குழு முடிவை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்த நிலையில், அக்கட்சி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பை கையகப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தநிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவித்தார்.
இந்தநிலையில் டெல்லி சென்றுள்ள அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஈரோடு கிழக்கி தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்கள் பெறப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் ஒப்புதல் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து,
பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்களை நேரில் தாக்கல் செய்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுகவின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.அதில் 145 பேரின் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. யாரும் தென்னரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம்பெற வில்லை. அனைத்து உரிமையும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கே வழங்கப்பட்டது என்றார்.