அறையை சோதனை செய்த சிறை காவலரை தாக்கிய பிரபல ரவுடி
கடலூர் மத்திய சிறையில் அறையை சோதனை செய்ய சென்ற சிறை காவலரை தாக்கிய பிரபல ரவுடி மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் அருகே கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 1000-க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சந்திரன் மகன் தனசேகர் என்கிற எண்ணூர் தனசேகர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்து விசாரணை கைதியாக இங்கு அடைக்கப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்கொலை முயற்சி
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறை காவலர் மணிகண்டன் என்பவர் எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து செல்போனை சோதனையின்போது கைப்பற்றினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சிறை காவலர் மணிகண்டன் குடும்பத்தை உயிரோடு எரிக்க பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய வழக்கில், சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டு இருந்த வெளி சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட ரத்த கொதிப்பு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது சிறை காவலர்கள் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
சிறைகாவலா் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று காலை சிறை காவலர் பிரித்திவிராஜ்(வயது 30) எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டு இருந்த வெளிச்சிறையில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது என் அறையில், நீ எப்படி வந்து சோதனை செய்யலாம்? என கூறியுள்ளார். இதனை அடுத்து, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த எண்ணூர் தனசேகர் சிறை காவலர் பிரித்திவிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொலை முயற்சி வழக்கு
இதுகுறித்து சிறை காவலர் பிரித்திவிராஜ் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறையை சோதனை செய்ய சென்ற சிறை காவலரை பிரபல ரவுடி தாக்கிய சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.