திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்
திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உள்ள 13 ஆக்கிரமிப்பு கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது. ஆடி கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா தலைமையில் கோவில் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
இதேபோல் மலைக்கோவில் மேல் உள்ள பழக்கடை, பூக்கடை உள்ளிட்ட 13 கடைகளின் ஆக்கிரமிப்புகளை கோவில் ஊழியர்கள் அகற்ற முயற்சி செய்தனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள 13 ஆக்கிரமிப்பு கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ஏல உரிமை ரத்து செய்து, கடை கோவில் வசம் எடுத்துக்கொள்ளப்படும் என துணை ஆணையர் விஜயா தெரிவித்துள்ளார்.