வடகிழக்கு பருவமழை: சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகம்...!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர்) தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் மூலம் சென்னையில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 107.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பாக 72.6 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது இயல்பை விட 48 சதவீதம் அதிகம் ஆகும்.