செல்போனுக்காக குத்திக்கொல்லப்பட்ட வடமாநில வாலிபர்: வழிப்பறி ஆசாமிகள் வெறிச்செயல்

திருப்பூரில் செல்போனை கொடுக்காததால் வடமாநில வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-05-15 20:15 GMT

திருப்பூர்,

பீகார் மாநிலம் சோன்பார்ஷா மாவட்டம் சீத்தாமாரி பகுதியை சேர்ந்தவர் புகார் பஷ்வான். இவருடைய மகன் ஆகாஷ்குமார் (வயது 21). இவர் திருப்பூர் கணியாம்பூண்டியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல்காரராக வேலை பார்த்து வந்தார். பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதி, பனியன் நிறுவனத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் காலேஜ் ரோட்டில் உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பனியன் நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு ஆகாஷ்குமார் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இரவு 10½ மணி அளவில் அங்குள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் 3 பேரும் சேர்ந்து கத்தியால் ஆகாஷ்குமாரின் வயிற்றுப்பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ்குமார் அலறியபடி ரத்தம் சொட்ட சொட்ட தான் தங்கியிருந்த அறைக்கு சென்று சக தொழிலாளிகளிடம் கூறியுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை 5 தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆகாஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் நேற்று காலை அவருடன் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்