கோவை கல்லூரிக்குள் உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறி ஓடிய மாணவிகள் - தொடரும் சம்பவங்கள்...!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.;
கோவை,
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் ஏற்பாடும் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கடந்த 10-ந் தேதி கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கதவில் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலையில் நேற்று ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்திரத்துக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.
தனியார் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றன. கல்லூரி வளாகத்திற்குள் உள்ளேயே மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளன.
அந்த விடுதி கேண்டினில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய விடுதியில் மாணவ-மாணவிகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, உணவு பரிமாறுவதில் நேற்று மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. கூடுதல் உணவு வழங்கக்கோரி மாணவர்கள் கேட்ட நிலையில் அதற்கு வடமாநில தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, வடமாநில தொழிலாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின் போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள கேண்டினுக்குள் நுழைந்துள்ளனர். இதை கண்ட மாணவிகள் அங்கிருந்து பதறி ஓடினர். இதன் பின்னர் மாணவர்களுக்கும் - வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர்களையும் - வடமாநில தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டு கட்டைகளுடன் சுற்றித்திரியும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.