வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்
வேதாரண்யத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகர் மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோ மீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகர் மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆறுகாட்டுத்துறை பகுதிக்கு செல்லும் வழியில் வனதுர்க்கை அம்மன் கோவில் எதிர்புறத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையும் நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.