கோவையில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்
கோவையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் பெட்ரோல் குண்டுவீச்சு குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.;
கோவை
கோவையில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் பெட்ரோல் குண்டுவீச்சு குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டை
கோவை மாநகரில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. மாநகரில் 5 இடங்களிலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் 2 இடங்களிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்றன. இதில் தொடர்புடைய ஆசாமிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் மாநகரில் முக்கிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட பல கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மாநகர் முழுவதும் உள்ள 400 கேமராக்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள தனியார்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட சில கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சந்தேகப்படும்படியானவர்களை பிடித்து விசாரணை நடைபெறுகிறது.
கேமராக்கள் செயல்படவில்லை
கோவையில் பல்வேறு சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மேம்பால பணிகள் காரணமாகவும், சரிவர பாரமரிப்பு இல்லாத காரணத்தாலும் முழுமையாக செயல்படவில்லை. சில கேமராக்களில் பதிவு செய்யும் கருவி பழுதாகி உள்ளது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்த பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக செயல்பட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
விடிய, விடிய சோதனை
கோவை மாநகரில் தற்போது அமைதியான சூழல் நிலவியபோதும், அதிவிரைவுப்படையினர், கமாண்டோ படையினர் உள்பட 3,500 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். விடிய, விடியவும் வாகன சோதனை நடைபெறுகிறது.
மத அமைப்புகள் சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்களையும் வீடியோ மூலம் பதிவு செய்து போலீசார் கண்காணிக்கிறார்கள்.
மதவிரோத பிரசாரங்களை சமூகவலைத்தளங்களில் பரப்புகிறார்களா? என்றும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். பெட்ரோல், டீசலை பாட்டில்களில் வாங்க வருபவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்.