"கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் பணிக்காலமாக கருதப்படும்" - தமிழக அரசு அரசாணை
ஊரடங்கு காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரையிலான ஊரடங்கு காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்திருந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை சிறப்பு விடுப்பாக கருதவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.