நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை.

நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை. தீபாவளி ஆர்டர்களை தைரியமாக செய்ய முடியும் என்று நம்பிக்கை

Update: 2023-08-01 15:27 GMT

திருப்பூர்

நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை. இதனால் தீபாவளி பண்டிகை ஆர்டரை தைரியமாக எடுத்துச் செய்ய முடியும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நூல் விலை

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. திருப்பூரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள் கடந்த காலங்களில் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததன் காரணமாக பனியன் உற்பத்தி பெருமளவு குறைந்து விட்டது.

திருப்பூர் மாநகரில் தற்போதைய சூழ்நிலையில் 50 சதவீதம் அளவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல் முடங்கியே காணப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் வருகை இல்லை. உள்நாட்டு ஆடை வர்த்தகமும் மந்த கதியிலேயே காணப்படுகிறது. மெல்ல, மெல்ல ஆர்டர்கள் வரத்தொடங்கி இருக்கிறது. பனியன் உற்பத்தி குறைவு காரணமாக நூல் விலை குறைய தொடங்கியது.

விலையில் மாற்றமில்லை

கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு 5 மாதமாக நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் நூல் விலை ரூ.25 வரை குறைந்தது. இதன் காரணமாக புதிய ஆர்டர்கள் எடுத்து செய்யும் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று நூற்பாலை உரிமையாளர்கள் நூல் விலையை அறிவிப்பது வழக்கம். இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலை சங்கம் நேற்று அறிவித்தது. அதில், இந்த மாத நூல் விலையில் மாற்றமில்லை என்றும், கடந்த மாத விலையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, வரி நீங்கலாக கோம்டு ரக நூல் விலை 16-ம் நம்பர் ரூ.232, 20-ம் நம்பர் ரூ.235, 24-ம் நம்பர் ரூ.245, 30-ம் நம்பர் ரூ.255, 34-ம் நம்பர் ரூ.268, 40-ம் நம்பர் ரூ.283 ஆக உள்ளது. செமி கோம்டு ரகம் 16-ம் நம்பர் ரூ.222, 20-ம் நம்பர் ரூ.225, 24-ம் நம்பர் ரூ.235, 30-ம் நம்பர் ரூ.245, 34-ம் நம்பர் ரூ.258, 40-ம் நம்பர் ரூ.273 ஆக உள்ளது.

தீபாவளி ஆர்டர்

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உள்நாட்டு பனியன் உற்பத்தி வேகமெடுத்துள்ளது. நூல் விலை உயராமல் இருப்பதால் தைரியமாக புதிய ஆர்டர்களை எடுத்து செய்ய முடியும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்