8 ஆண்டாக முறையான குடிநீர் வழங்கவில்லை-ஆதார், வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
8 ஆண்டாக முறையான குடிநீர் வழங்காததால் ஆதார், வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.;
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடந்த 2-ந் தேதி கிராம சபை கூட்டத்தின் போது தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் வில்லாணி கிராம மக்கள் தங்களின் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.