அமர் பிரசாத் ரெட்டியை குண்டாசில் கைது செய்ய திட்டமில்லை - தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தடைகோரிய வழக்கில் தாம்பரம் காவல் ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தார்.

Update: 2023-11-08 13:24 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தம்மை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்பதைத் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளனர். புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. 500 கைதிகளுக்கு ஒரு சமையல் அறை என இருக்க வேண்டும். ஆனால் 2,910 கைதிகளுக்கு ஒரு சமையல் அறைதான் உள்ளது என்றும் அந்த ஜாமீன் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தாம்பரம் காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்