தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை
எஸ்.டி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை;
குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த முறையும் தேர்தல் நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீடு
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்து 623 வாக்காளர்கள் உள்ளனர். தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்.டி. பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊராட்சியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தட்டப்பாறை ஊராட்சிக்கு எஸ்.டி. பெண்கள் பிரிவில் ஒரே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவிலும் ஜாதி சான்று சரியானபடி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் நடைபெறவில்லை.
இந்தநிலையில் கடந்த ஆண்டே தட்டப்பாறை ஊராட்சி தலைவர் பதவி எஸ்.டி.பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணை செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.
யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை
இந்தநிலையில் தட்டப்பாறை ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் எஸ்.டி. பெண்கள் பிரிவுக்கே தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. நேற்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்தது. ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தட்டப்பாறை ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான எம்.கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம். தமிழ்வாணன் ஆகியோர் தெரிவித்தனர்.
தட்டப்பாறை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் எங்கள் தட்டப்பாறை ஊராட்சியை எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கி உள்ளனர். எங்கள் ஊராட்சியில் எஸ்.டி .பிரிவினர் யாரும் வசிக்கவில்லை. ஆகவே தட்டப்பாறை ஊராட்சியை பெண்கள் பொதுப் பிரிவுக்கு மாற்ற தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.