உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு
உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழ்செட்டிப்பட்டு, சேர்ப்பாப்பட்டு, தலையாம்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:-
பெண்களின் உழைப்பை நான் அங்கீகரிக்கிறேன் என்று சொல்லி அதற்கு அடையாளமாக உரிமை தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வந்தால் தான் பெண்கள் தங்கள் வீட்டு முன்பு எந்த கட்சியை ஆதரிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக கோலம் போடுவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அனைத்து பெண்களின் உள்ளங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் பிடித்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. இனி உலக சரித்திரத்தில் மு.க.ஸ்டாலின் இடத்தை பெண்களின் மனதில் யாரும் பிடிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தமிழகத்தை யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். ஆனால் எந்த கொம்பனாலும் இனி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமை தொகையை ரத்து செய்யவோ திட்டத்தை அழிக்கவோ முடியாது. உங்கள் வாழ்நாளெல்லாம் இந்த உரிமைத்தொகை உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.