வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது - ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என்பன உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மருத்துவர்கள் எந்தவித விதிமீறலிலும் ஈடுபடுவது இல்லை என்றும், 'மருத்துவர்' என வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால், பணி நிமித்தமாக மருத்துவர்கள் அவசர பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி, "வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல், மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடம் கருத்து கேட்கலாமே?" என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு தரப்பில், இந்த வழக்கில் தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் இணைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் இணைக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இது ஒரு தற்காலிக உத்தரவுதான் என்றும், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதே சமயம், 'மருத்துவர்' ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.