கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், அடுத்த சில நாட்களில் மேற்கு வங்கத்திற்கும், வங்காளதேசத்திற்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.