என்.எல்.சி. நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது - திருமாவளவன்
கடந்த காலங்களில் நிலத்தை வழங்கிய மக்களை என்.எல்.சி. நிறுவனம் ஏமாற்றி இருக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை 100 அடி சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை சந்தித்தனர். அப்போது வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் 2 சுரங்கங்கள் விரிவாக்கம் செய்வதற்கு விவசாயிகளின் நிலத்தை கையெடுக்கப்படுத்த திட்டமிட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்க உள்ளனர். கடந்த காலங்களில் நிலத்தை வழங்கிய மக்களை என்.எல்.சி. நிறுவனம் ஏமாற்றி இருக்கிறது. ஏற்கனவே நிலத்தை வழங்கிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே என்.எல்.சி. நிறுவனம் நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைத்திடவேண்டும். இந்த குழு முழுமையான ஆய்வை நடத்தி ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு தரவேண்டும் என்பதை மக்கள் கோரிக்கை விடுக்கிறார்களோ, அந்த கோரிக்கையை பரிசீலித்து 2000-ம் ஆண்டிலிருந்து இதுவரை நிலம் வழங்கி இருக்கிற, வழங்கப்போகிற மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் இழப்பீடு வழங்குவதற்குரிய தகவல்களை இந்த குழு திரட்டித்தரவேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிரந்தரமாக வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வி.சி.க., தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்பட தோழமை கட்சிகள் ஒருங்கிணைந்து விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருக்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.