பரவனாறு வழியாக வீணாக கடலில் கலக்கிறது: என்.எல்.சி. சுரங்கநீர் முழுமையாக விவசாயத்துக்கு தேவை விவசாயிகள் கருத்து

என்.எல்.சி. சுரங்கநீர் முழுமையாக விவசாயத்துக்கு வழங்க விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-07-25 18:45 GMT

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 சுரங்கங்கள் உள்ளன. 46 ஆயிரத்து 59 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. அவ்வாறு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் அனல்மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

நிலக்கரி வெட்டி எடுக்கும்போது சுரங்கங்களில் சுரக்கும் நீர், ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் செங்கால் ஓடை வழியாக வாலாஜாஏரி, பரவனாறு, பெருமாள் ஏரிக்கு செல்கிறது, அதன் மூலம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வடலூர், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் 70 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து பயன்பெற்று வருகின்றனர்.

கடலில் கலக்கும் என்.எல்.சி. நீர்

இருப்பினும் என்.எல்.சி.யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பரவனாறு வழியாக என்.எல்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதை தவிர்க்க பரவனாறு வழியாக செல்லும் தண்ணீரை, கத்தாழை மதகு வழியாக அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு திருப்பிவிட்டால் அதன் மூலம் விளக்கபாடி, தர்மநல்லூர், தட்டானோடை, ஆலம்பாடி, ஆதனூர், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், சின்னகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் தண்ணீர் கிடைக்காமல் விவசாயத்தை கைவிட்டவர்கள் கூட மீண்டும் விவசாய பணியை தொடர வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.

மாவட்ட நிர்வாகத்தின் கடமை

இது தவிர நிலத்தடி நீர் மட்டம் உயரும்பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது. இதனால் கோடை காலங்களில் மக்கள் குடிநீரை தேடி காலி குடங்களுடன் அலைய வேண்டிய அவல நிலை ஏற்படாது. எனவே நாள் தோறும் என்.எல்.சி. தண்ணீர் வீணாவதை தடு்க்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இந்த கடமையை தவற்விடாமல் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறிய கருத்துகள் இதோ...

10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும்

வீரமுடையாநத்தம் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் நலச்சங்கத் தலைவர் வி.ஜி.சிட்டிபாபு கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகத்தால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், கிராம மக்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். விளைநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் முழுமையாக குறைந்து விட்டது. இதனால் விளைநிலங்கள் தற்போது விளைச்சல் இன்றி கிடக்கிறது. ஆகவே என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கத்தாழை, வளையமாதேவி வழியாக ஆதனூர், பெரியநற்குணம், அகரஆலம்பாடி ஏரிகளில் நிரப்பினால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். இது குறித்து தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அகரஆலம்பாடி வள்ளலார் உழவர் மன்ற தலைவர் வேல்முருகன் கூறுகையில், என்.எல்.சி.யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரவனாறு வழியாக பரங்கிப்பேட்டை கடலுக்கு வீணாக செல்கிறது. என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி வறண்டு நிலத்தடி நீர் பாதித்து உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இவைகளில் என்.எல்.சி. நீரை அதிக செலவின்றி கொண்டு வந்து சேர்த்தால், சுமார் 50 கிராம விவசாயிகள் பயன் அடைவார்கள். ஆகவே என்.எல்.சி. நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒருங்கிணைந்த சாகுபடி

கீழ்அனுவம்பட்டு விவசாயி ரவீந்திரன் கூறுகையில், கடலூர் முற்றிலும் மாறுபட்ட மாவட்டம் ஆகும். காவிரி பாசன பகுதி, ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறு பாசனம், மானாவாரி பாசனம் என அனைத்தையும் ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளை கொண்ட மாவட்டமாக உள்ளது. அனைத்து பயிர்களும் இங்கு விளைகிறது. என்.எல்.சி.யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் வாலாஜா, பெருமாள், வடலூர் ஐயன் ஏரி மூலம் 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கிறது. இதை சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் பெறும் பகுதிக்கும், நெய்வேலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள வடக்குத்து, தென்குத்து, பத்திரக்கோட்டை, வெங்கடாம்பேட்டை, வேகாக்கொல்லை உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்