என்எல்சி சுரங்க நீர் வெளியேற்றப்படாததால்தண்ணீரின்றி கருகிய நாற்றங்கால் விவசாயிகள் கவலை
என்.எல்.சி. சுரங்க நீர் வெளியேற்றப்படாததால் தண்ணீரின்றி நாற்றாங்கால் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
வடலூர்,
நெய்வேலி என்.எல்.சி, 2-ம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கருங்குழி மேட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் கருங்குழி மேட்டுக்குப்பம், மேலக்கொளக்குடி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் என்.எல்.சி.சுரங்க நீரை நம்பி கருங்குழி மேட்டுக்குப்பம், மேலக்கொளக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி நாற்றாங்கால் அமைத்து நெல் விதைத்தனர். இதையடுத்து நெல் முளைத்து நாற்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாற்று நடவு
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வழக்கம்போல் இல்லாமல், இந்தாண்டு என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படாததால் நாற்றாங்காலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாற்றாங்காலில் உள்ள நெல் நாற்றுகள் தற்போது தண்ணீரின்றி காய்ந்து கருகி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து நாற்றாங்கல் அமைத்து நெல் நாற்றுகளை வளர்த்து வந்தோம். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால், அதனை பிடுங்கி நாற்று நட்டு குறுவை பணியை இந்தாண்டு நல்ல முறையில் செய்ய வேண்டும் என நாங்கள் நினைத்து இருந்தோம்.
ஆனால் இந்தாண்டு சுரங்கத்தில் உள்ள உபரி நீரை சென்னை மற்றும் ஆத்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை
இதற்காகதான் தற்போது என்.எல்.சி. சுரங்க உபரி நீரை பெரிய ஏரிக்கு திறந்துவிடாமல் அதிகாரிகள் உள்ளனர். இதன் காரணமாக எங்களது நாற்றாங்கால் தண்ணீரின்றி கருகி விட்டது. என்.எல்.சி. சுரங்க உபரி நீர் வெளியேற்றப்படாததால் தற்போது எங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. இதை தவிர்க்க வழக்கம்போல் என்.எல்.சி. சுரங்க உபரி நீரை பெரிய ஏரிக்கு திறந்து விட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.