என்.எல்.சி விவகாரம்: துரோக வரலாற்றில் கூடாரமே திமுக தான்- பாமக பாய்ச்சல்
என்.எல்.சி. விவகாரத்தில் தி.மு.க.வின் தோல்வியை மறைக்க அன்புமணி ராமதாஸ் மீது பழி போட முயற்சிப்பதா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
என்.எல்.சி. விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அளித்த பதிலுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருக்கிறார். வேளாண் துறையின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு வேளாண் துறை மீதும் விவசாயிகள் நலனிலும் தான் அக்கறை இல்லை என்று பார்த்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விவகாரங்கள் குறித்த அடிப்படை பார்வை கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும், அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும்தான் வெளியிடப்படும். அவற்றின் மீது எந்த எதிர் கேள்வியும் எழுப்பமுடியாது, விவாதமும் நடத்தமுடியாது. தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்.
அடுத்ததாக தமிழ்நாட்டில் என்.எல்.சி. சுரங்க திட்டங்களை திரும்ப பெறமுடியாது என்று மத்திய மந்திரி கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுதான். என்.எல்.சி.க்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி. தமிழகத்தில் எதையும் செய்யமுடியாது. அதை செய்யும் அதிகாரம் தி.மு.க. அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் அன்புமணி ராமதாசை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. தி.மு.க. அரசின் தோல்வியையும், துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக அன்புமணி ராமதாஸ் மீது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
பா.ஐ.க. அரசின் அனைத்து கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் தி.மு.க. என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது. இந்த மர்மத்தைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்.எல்.சி. நிறுவனத்திடமிருந்து விவசாயிகளை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க.வுக்கும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கும் அன்புமணி ராமதாஸ் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. என்.எல்.சி.யை வெளியேற்றி மண்ணையும், மக்களையும் காப்பது தான் பா.ம.க.வின் நோக்கம். மாறாக என்.எல்.சி. விவகாரத்தில் இதுவரை இழைக்கப்பட்ட அனைத்து துரோகங்களுக்கும் தி.மு.க. தான் காரணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.