என்.எல்.சி. அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

ஆலையில் நடந்த எந்த ஒரு தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது. மீறி வெளியிட்டால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய என்.எல்.சி. துணை பொதுமேலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு, ஐகோர்ட்டு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Update: 2023-09-04 20:43 GMT

சென்னை,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது தெர்மல் நிலையத்தில் 5-வது யூனிட்டில் கடந்த 2020-ம் ஆண்டு பாய்லர் வெடித்து நடந்த மிகப்பெரிய விபத்தில் 15 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். 2022-ம் ஆண்டு மே மாதம் 6-வது யூனிட்டில் பாய்லர் வெடித்து 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் போலீசார் தங்களை கைது செய்யக்கூடும் என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் என்.எல்.சி. தலைமை பொதுமேலாளர் கோதண்டன் உள்பட 8 அதிகாரிகள் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

சுற்றறிக்கை

அப்போது இந்த அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று என்.எல்.சி. பாட்டாளி தொழில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார் சார்பிலும், விபத்தில் பலியானவர்களின் வாரிசுகள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, என்.எல்.சி. மனித வள மேம்பாட்டுத்துறை துணை பொதுமேலாளர், தொழிலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "எந்த ஒரு தொழிலாளியும், தங்கள் பணி தொடர்பாகவும், என்.எல்.சி. வளாகத்துக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகள் குறித்தும் வெளியில் எதுவும் கூறக்கூடாது. இதை மீறி யாராவது தகவல்களை வெளியிட்டால், அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

நோக்கம் என்ன?

விபத்து தொடர்பான முன்ஜாமீன் வழக்கு விசாரணையில் உள்ளபோது, இதுபோன்ற சுற்றறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு என்.எல்.சி. தரப்பில், இது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் சுற்றறிக்கைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இதுபோன்ற சுற்றறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது என்று பதில் அளித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

என்.எல்.சி. ஆலைக்குள் அடிக்கடி விபத்துகள் நடந்துள்ளன. அதுதொடர்பான வழக்குகளில் நடைபெறும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், என்.எல்.சி. ஆலைக்குள் என்ன நடக்கிறது? என்பதை இந்த ஐகோர்ட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

அவமதிப்பு வழக்கு

அந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், சம்பவத்தை பார்த்தவர்கள், இறந்தவர்களின் வாரிசுகளுக்குதான் அந்த விபத்துகளின் விவரம் தெரியும். எனவே இந்த ஐகோர்ட்டுக்கு விவரம் தெரிவிக்கக்கூடாது என்ற நோக்கத்துடன், அதிகாரி வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை கோர்ட்டு அவமதிப்பு செயலாகும்.

எனவே, என்.எல்.சி. மனித வள மேம்பாடு துணை பொதுமேலாளர் மீது தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் விதமாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன். இதற்காக அந்த அதிகாரியின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்.எல்.சி நிர்வாகம் தரவேண்டும்.

கைது செய்ய வேண்டாம்

மேலும் இடையீட்டு மனுதாரர் தரப்பு வக்கீல் கே.பாலு, ஒருமுறை நடந்தால் விபத்து. அதுவே தொடர்ந்து நடந்தால் எப்படி விபத்து என்று கருத முடியும்? இதுவரை நடந்த 4 விபத்துகளில், 20 பேர் பலியாகி உள்ளனர், 11 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். எனவே, இந்த அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது'' என்று வாதிட்டார்.

ஆனால் விபத்துகள் 2020-ம் ஆண்டு நடந்தவை என்பதால், மனுதாரர்களை போலீசார் கைது செய்ய வேண்டாம். இந்த வழக்குகளின் புலன் விசாரணை நிலை குறித்து அறிக்கையை நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலைய போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தன்மை குறித்து முடிவு செய்ய முடியும். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்