திருமங்கலம் பஸ் நிலைய கட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

திருமங்கலம் பஸ் நிலையத்தின் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-24 20:48 GMT


திருமங்கலம் பஸ் நிலையத்தின் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் பஸ் நிலையம்

மதுரை திருமங்கலம் பஸ் நிலையம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், திருமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 35 வருடங்களுக்கு முன்னதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது மக்கள் தொகையும், வாகனங்களும் அதிகரித்ததை தொடர்ந்து திருமங்கலம்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.22 கோடி திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு பதிலாக, திருமங்கலம் நகரில் உள்ள பஸ் நிலையத்தை இடித்து விட்டு மீண்டும் அங்கேயே கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்காக பஸ் நிலைய கடைகளை இடிக்க கடைக்காரர்களுக்கு நகராட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது. எனவே, திருமங்கலம் நகருக்குள் உள்ள பஸ் நிலையத்தை இடிக்கவும், மறு சீரமைப்பு செய்யவும் அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பஸ் நிலையத்தை கட்டவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன.

35 ஆண்டுகளுக்கு முன்பு

விசாரணை முடிவில், திருமங்கலத்தில் தற்போது உள்ள பஸ் நிலையம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களின் கட்டுமானங்களை நாம் பார்க்கிறோம். அதேபோல அணைகள் மற்றும் பழமையான கட்டமைப்புகள் இன்றும் கம்பீரமாக உள்ளன. ஆனால் நவீனகாலத்தில் ஒரு கட்டிடம் வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படும் வகையில் இருந்தால் நாம் எங்கு செல்கிறோம் என தெரியவில்லை.

எனவே திருமங்கலம் பஸ் நிலையத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய திருச்சி என்.ஐ.டி. கல்லூரி சிவில் என்ஜினீயரிங் பிரிவு சார்பில் தொழில்நுட்ப வல்லுனர் குழு அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த குழுவினர் திருமங்கலம் பஸ் நிலைய கட்டுமானங்களின் உறுதித்தன்மை, ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமங்கலம் நகராட்சி கமிஷனர் பஸ் நிலையம் கட்டும் போது செலவிடப்பட்ட தொகை,, வெளியூர் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்காக வசூலிக்கப்பட்ட தொகை, அதன் மூலம் நகராட்சிக்கு கிடைத்த வருமானம் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

சூப்பிரண்டு சேர்ப்பு

அத்துடன் 35 வருடங்களுக்கு முன் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் விவரங்கள், மோசமான கட்டுமானத்தை கட்டிய ஒப்பந்ததாரரை தடுப்பு பட்டியலில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றையும் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மதுரை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரையும் இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளது.

அவர்கள், திருமங்கலம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 வருடங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை, பஸ் நிலையம் மற்றும் நகர்ப்பகுதியை சுற்றி உள்ள போக்குவரத்து நெரிசல் ஆகியன குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்