முறைகேடுகளை கண்காணிக்க 9 ஆய்வுக்குழுக்கள் அமைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் வட்ட அளவிலான 9 ஆய்வுக் குழுக்களை அமைத்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்;
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் வட்ட அளவிலான 9 ஆய்வுக் குழுக்களை அமைத்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
குழுக்கள் அமைப்பு
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் (2023-2024) குறுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்ய 360 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. விவசாயிகளிடம் புகார் இல்லாமலும், தரமான நெல்லை கொள்முதல் செய்யவும், கொள்முதல் பணிகளில் எவ்வித புகாருமின்றி செயல்படவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்யவும், வாரத்துக்கு 2 கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, அதன் குறைபாடுகளை அறிக்கையாக சமர்பிக்கவும், வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஒன்றிணைத்து, வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி தஞ்சை வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ள 48 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணித்து ஆய்வு செய்ய வட்ட வழங்கல் தனித்துணை தாசில்தார் ராஜ்குமார், இளநிலை தர ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரத்தநாடு வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ள 100 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், இளநிலை தர ஆய்வாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவையாறு-பூதலூர்
திருவையாறு வட்டாரத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க துணை தாசில்தார் சுந்தரசெல்வி, இளநிலை தர ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். பூதலூர் வட்டாரத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க உதவி வட்ட வழங்கல் அலுவலர் நல்லதம்பி, தர ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கும்பகோணம் வட்டாரத்தில் 25 நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் மதுசூதனன், உதவி தர ஆய்வாளர் நாகேசன், பாபநாசம் வட்டாரத்தில் 48 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், இளநிலை தர ஆய்வாளர் ஜெயபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவிடைமருதூர்- பட்டுக்கோட்டை
திருவிடைமருதூர் வட்டாரத்தில் 30 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க உதவி வட்ட வழங்கல் அலுவலர் மனோரஞ்சிதம், இளநிலை தர ஆய்வாளர் செந்தில்மாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 25 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் தரணிகா, இளநிலை தர ஆய்வாளர் அண்ணாதுரை, பேராவூரணி வட்டாரத்தில் 10 நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், இளநிலை தர ஆய்வாளர் வீரப்பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆய்வுக்குழுவினர் நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணித்து, எந்தவித புகார்கள் இன்றி செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.