சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை பற்றி பரபரப்பு தகவல்கள்

சென்னையில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து பரரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. போதைப்பொருள், ஏ.கே.47 துப்பாக்கிகள் கடத்தல் தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Update: 2023-04-07 23:53 GMT

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னை மண்ணடி, பாரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான கோவூர், குன்றத்தூர், போரூர், பம்மல் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், தங்கும் விடுதி, கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடலோர பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு ஒன்றை கடலோர காவல்படையினர் மடக்கி சோதனை போட்டனர். அந்த படகில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கடத்திவரப்பட்டது தெரியவந்தது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு பணம் சப்ளை செய்வதற்கு விற்பனைக்காக இந்த போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

திருச்சி முகாமில் 9 பேர் கைது

இது தொடர்பான வழக்கை கேரள என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளாக அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் கேரள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, அதில் கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் சுமார் ரூ.87 லட்சம் கணக்கில் காட்டாத ரொக்கப்பணம் மற்றும் சிங்கப்பூர் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என்.ஐ.ஏ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஹவாலா பணப்பரிமாற்றங்கள்

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை கடத்தி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் சென்னைக்கு கொண்டுவந்து, இங்கிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும், அதை அடிப்படையாக வைத்துதான் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், என்.ஐ.ஏ. வட்டாரத்தில் கூறப்பட்டது. முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்