கலெக்டர் அலுவலகத்தில் 2 கார்கள் ஜப்தி

நாமக்கல் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்காததால் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த 2 கார்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2023-10-17 18:39 GMT

இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு

நாமக்கல் காந்திநகரை சேர்ந்தவர் திருவள்ளுவன் (வயது65). இவருக்கு சொந்தமான நிலம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் பகுதியில் 86.5 சென்ட் இருந்தது. இந்த நிலத்தை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

அதற்கு இழப்பீடாக சதுரஅடிக்கு 82 காசுகள் கொடுக்கப்பட்டது. இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை என திருவள்ளுவன் தரப்பில் நாமக்கல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சதுர அடிக்கு ரூ.65 வீதம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வரப்பட்டது.

2 கார்கள் ஜப்தி

எனவே திருவள்ளுவன் தரப்பில் தனக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.1 கோடியே 31 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டி இருப்பதாக நாமக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கடந்த வாரம் நாமக்கல் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் உள்ள 5 வாகனங்கள், கம்ப்யூட்டர்கள், மேஜை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு அமீனா முன்னிலையில் நேற்று கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த 2 கார்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்