தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேவாசிரியர் மண்டபத்தில் பழுதடைந்து அழிந்து வரும் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில் தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி மற்றும் செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் அமைந்துள்ளது.
தேவாசிரியர் மண்டபம்
மாமன்னன் ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்ற நிலையில் இந்த சன்னதி வடிவில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறப்படுகிறது.இந்த சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தேவாசிரியர் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தில்தான் தேவர்கள் சிவபூஜை செய்யும் இடமாக கருதப்படுகிறது. 63 நாயன்மார்களும் திருமுறை இயற்றிய தேவாசிரியர்களும் தங்கி இருந்ததாலே, இதற்கு தேவாசிரியர் மண்டம் என பெயர் பெற்றதாம். இதனால் கோவிலுக்கு வருபவர்கள் தேவாசிரியர் மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோவிலுக்குள் செல்வார்கள் என்பது ஐதீகம்.
சிதைந்து வரும் மூலிகை ஓவியங்கள்
இந்த மண்டபத்தில் மேல் கூரையில் மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் தியாகராஜர் தேவலோகத்தில் இருந்து தேர் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாண வேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த மண்டபம் முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட நிலையில் மேல் பரப்பில் கருங்கற்கல் இணைக்கும் இடத்தில் சிறிது, சிறிதாக விரிசல்கள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே கசிய தொடங்கியது. இதனால் மண்டபம் மேற்கூரையில் வரையப்பட்ட ஓவியங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் உரிய பராமரிப்பு இன்றியும், வவ்வால்களின் எச்சம் போன்ற பல காரணங்களால் பழமையான அரிய ஓவியங்கள் சிதைந்து வருகின்றன.
பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது
எந்தவித பராமரிப்பு இன்றி உள்ள தேவாசிரியர் மண்டபம் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு, சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.. குறிப்பாக அஸ்தம நட்சத்திரத்தில் கொடி ஏறி, ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்ட விழாவிற்காக தேரில் எழுந்தருள தியாகராஜர் மூலதானத்தில் இருந்து புறப்பட்டு தேவாசிரியர் மண்டபத்தில் எழுந்தருளி, பின்னர் தேருக்கு செல்வார்.
அதேபோல் தேரில் புறப்பட்டு மீண்டும் தேவாசிரியர் மண்டபத்தில் எழுந்தருளி பக்த காட்சி முடிந்து மீண்டும் மூலதானத்தை அடைவது வழக்கம். மற்ற நாட்களில் எந்தவித பயன்பாடுன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உரிய பாரமரிப்பு இன்றி கட்டிடத்தில் அழுக்குகள் படிந்தும், வவ்வால்களில் கூடராமாக மாறி அதன் கழிவுகளால் ஓவியங்களை சிதைத்து வருவது பக்தர்கள் இடையே வேதனை ஏற்படுத்தி வருகிறது.
பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்
ஈசனின் புகழை எடுத்து சொல்லும் அறிய ஓவியங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் அழிந்து வருகிறது. தமிழக அரசு மீண்டும் பழமை மாறாமல் மூலிகைகளை கொண்டு தேவாசிரியர் மண்டபத்தில் சிதைந்த ஓவியங்களை வரைந்து புதுப்பிக்க வேண்டும். மேலும தேவாசிரியர் மண்டபத்தை முழுமையாக சீரமக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதராஜன்;:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இந்த கோவிலில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள தேவாசிரியர் மண்டம் 63 நாயன்மார்கள் அனவைரும் கூடிய இடம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு வணங்கிவிட்டு உள்ளே செல்வார்கள். தியாகராஜர் தேவலோகத்தில் இருந்து புலோகம் வந்தற்கான நிகழ்வினை தேவாசிரியர் மண்டபத்தின் கூரையில் மிக அற்புதமாக மூலிகை ஓவியங்கள் மூலம் நமக்கு கண் முன்னே காட்சிகளாக படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மண்டபம் தற்போது பாரமரிப்பு இன்றி பழுதடைந்து வருகிறது. மேற் கூரை கருங்கள் இணைப்புகள் இடையே காரைகள் பெயர்ந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே ஓழுகிறது. இதனால் கட்டிடம் பலவீனம் அடைந்து வருகிறது. குறிப்பாக மழை நீர் ஒழுகுவதால் அறிய வகை ஓவியங்கள் அழிந்து வருகிறது. பழமைவாய்ந்த ஓவியங்களை பாதுகாக்க வேண்டியது கடமை. தியாகராஜர் வரலாற்றை கூறும் ஓவியங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே முக்கிய பொக்கிஷமாக திகழும் பழமை வாய்ந்த ஓவியங்களை பாதுகாத்திட அறநிலையத்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.