புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
சிவகிரியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகிரி:
சிவகிரியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பெண்
தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ்நிலையம் அருகே உள்ள கருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துராஜ்- கனகலட்சுமி தம்பதி மகள் துர்காதேவி (வயது 20).
இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா மல்லி அருகே உள்ள கார்த்திகைபட்டியை சேர்ந்த மதியழகன் மகன் கருப்பசாமி (25) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது துர்காதேவி 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தனிக்குடித்தனம்
இந்தநிலையில் தனிக்குடித்தனம் செல்வதற்கு துர்காதேவி கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த கருப்பசாமியின் தாய், தந்தை இருவரும் சேர்ந்து, நீங்கள் இப்போது தனிக்குடித்தனம் செல்லக்கூடாது. அப்படி செல்வதாக இருந்தால் உங்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததற்காக ரூ.5 லட்சம் கடன் உள்ளது. அந்த கடனை அடைத்து விட்டு தனியாக செல்லுங்கள், என கூறியுள்ளனர்.
இதனால் புதுமண தம்பதிகள் தனிக்குடித்தனம் செல்லவில்லை.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் கர்ப்பிணியாக இருந்த துர்காதேவி, சரியாக சாப்பிட முடியாத காரணத்தால் கடந்த 20 நாட்களுக்கு முன் சிவகிரியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த கருப்பசாமி அழைத்துள்ளார். அதற்கு துர்காதேவி, என்னால் இப்போது சரியாக சாப்பிட முடியவில்லை. எனவே நான் அங்கு வர முடியாது, என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த துர்காதேவி கடந்த 2-ந் தேதி தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து உயிருக்கு போராடினார்.
பரிதாப சாவு
இதனை அறிந்த அவரது உறவினர்கள் துர்காதேவியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் துர்காதேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துர்காதேவியின் தாய் கனகலட்சுமி சிவகிரி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்தார். புளியங்குடி துணை சூப்பிரண்டு கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
துர்காதேவிக்கு திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆவதால், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.