தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம் ஏற்படும் -கவர்னர் பேச்சு

தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம் ஏற்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.;

Update: 2022-05-27 20:40 GMT

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய கல்வி கொள்கையால் புதிய சீர்திருத்தம்

தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும்.

புரிந்து கொள்ள வேண்டும்

தேசிய கல்வி கொள்கையின் அடித்தள தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதனை முழுமையாக படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் அதனை செயல்படுத்த முடியும். அனைத்து துணைவேந்தர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தி கருத்துக்கள், விமர்சனங்கள் பெறப்பட்டன. அடிப்படையில் எந்தவித மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

பல மொழிகள், பல இனங்கள், பல விதமான பழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்றிணைத்து தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் கல்வி முறையை தரம் உயர்த்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நல்ல யோசனைகளை முன் வைத்து சரியான அணுகுமுறையுடன் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட கல்வியாளர்கள் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆன்மிக பூமி

மீனுக்கு நீந்த கற்றுத்தர தேவையில்லை. இங்கு உள்ள கல்வியாளர்கள் தேசிய கல்வி கொள்கையை சரியான உணர்வுடன் நிச்சயம் செயல்படுத்துவார்கள். தமிழ்நாடு ஆன்மிக பூமி. செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள் என்றார் பாரதியார். இந்தியா பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மொழிகளுடன் பலவிதமான புவியியலுடன் பார்க்கப்பட்டாலும், அது பாரதம் என்ற ஒரே நாடு.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்