நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சம்: மக்களை மட்டுமின்றி மண்ணையும் காப்பது இந்த அரசு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து இருப்பதன் மூலம் மக்களை மட்டுமல்ல மண்ணையும் காக்கும் அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து இருப்பதன் மூலம் மக்களை மட்டுமல்ல மண்ணையும் காக்கும் அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புகழ் மொழிகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு விழாக்கள் என்பது பொழுதுபோக்குக்காக நடைபெறுகிற விழாக்கள் அல்ல.
ஏதோ எங்களை புகழக்கூடிய விழாக்கள் அல்ல. மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று எடுத்துச்சொல்லக்கூடிய விழா. மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி என்னை பாராட்டி பேசுவதை விட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று விரும்புகிறவன் நான். புதிய புகழ் மொழிகள் எனக்கு தேவையில்லை. இருக்கும் புகழே போதும் என்று நினைக்கக்கூடியவன் நான்.
ஸ்டாலின் என்றால் உழைப்பு
ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு, உழைப்பு என்று உழைப்பின் சிகரமாக இருந்த தலைவர் கருணாநிதி பாராட்டி சொன்னதைவிட எனக்கு வேறு ஏதேனும் பாராட்டு இருக்க முடியுமா?. நீ உன் அப்பாவை போலவே இருக்கிறாய் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைவிட வேறு பாராட்டு எனக்கு இருக்கவே முடியாது. இத்தகைய பாராட்டுகளின் மூலமாக அடைந்த உற்சாகத்தில்தான் நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் உழைப்பேன். என் உயிர் இருக்கும் வரை உழைத்துக்கொண்டே இருப்பேன் இது உறுதி. என்னுடைய இலக்கு அதுதான்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி. ஆகியவற்றை உள்ளடக்குகிற திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
மண்ணை காக்கும் அரசு
3 நாள் பயணமாக இந்த மேற்கு மண்டலத்துக்கு நான் புறப்படுவதற்கு முன்பு 2 வெற்றிச்செய்திகள் எனக்கு வந்து சேர்ந்தன. ஒன்று, 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்து இருக்கிறது. இது வரலாற்று சிறப்பு மிக்க மிகப்பெரிய வெற்றி. மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமின்றி மண்ணை காக்கக்கூடிய அரசாகவும் இது செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பான விளைச்சல் மூலம் என்ன தெரிகிறது என்றால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் எடுக்கப்பட்ட துல்லியமான நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சம் மெட்ரிக் டன் செயல் உற்பத்தி உயர்ந்தது. இந்தஆண்டு அதையும் மிஞ்சி 1 கோடியே 22 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்து உள்ளது. அதாவது 18 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதல் உற்பத்தி செய்து இருக்கிறோம். இதுபோல் நெல் உற்பத்தி பாசன பரப்பும் அதிகமாகி உள்ளது. இந்த சாதனை சாதாரணமாக நடந்து விடவில்லை.
மகிழ்ச்சி
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண்துறைக்கு என்று தனிபட்ஜெட் தாக்கல் செய்த ஒரே மாநிலம் நமது தமிழ்நாடுதான். 50 சதவீீதம் மானியத்தில் பாரம்பரிய விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. நான் கோபிசெட்டிபாளையம் சென்று இருந்தபோது (நேற்று முன்தினம்) விவசாயிகள் பாரம்பரிய விதை மூலம் விளைந்த நெல்மணிகளை கொடுத்து நீங்கள் அறிவித்த திட்டத்தால் விளைந்தது என்று மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே நன்றி நன்றி நன்றி என்று சொன்னார்கள். இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. கடைமடை வரைக்கும் தண்ணீர் செல்வதற்கு கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்துதான் இத்தகைய மகத்தான சாதனைக்கு அடித்தளம் அமைத்தது.
அர்ச்சகர்
இன்னொரு முக்கியமான வெற்றி செய்தி என்னவென்றால், இங்கே கணேசமூர்த்தி எம்.பி, பேசும்போது கோடிட்டு காட்டினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூகநீதி எண்ணத்துக்கு சென்னை ஐகோர்ட்டு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுத்து விட்டது. ஆலயங்களின் அர்ச்சகராக நியமிக்கப்படுபவர்கள் அதற்கான உரிய பயிற்சி பெற்றிருந்தால்போதும். அதுதான் நம்முடைய கருத்து. இதில் சாதி என்பது ஒரு அளவுகோலாக இருக்கக்கூடாது. இத்தகைய சமூக நீதியை காக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கோர்ட்டுக்கு போனார்கள். வழக்கு தாக்கல் செய்தார்கள். அதற்கு தடைபோட சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. திட்டவட்டமாக மறுத்து விட்டது.
கொள்கைக்கு வெற்றி
தந்தை பெரியாரும், நம்முடைய தலைவர் கருணாநிதியும் இன்று இருந்திருந்தால் எப்படி மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இது நமது கொள்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
வேளாண் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆனாலும் சரி, அனைத்திலும் தொலைநோக்கு பார்வையோடு நாம் முடிவெடுத்து செயல்படுவதன் காரணத்தால் இத்தகைய வெற்றி சாத்தியம் ஆனது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.