கல்லூரி மாணவர்களிடம் போதைப்பழக்கத்தை தடுக்க புதிய திட்டம்

கல்லூரி மாணவர்களிடம் போதைப்பழக்கத்தை தடுக்க புதிய திட்டம்;

Update:2023-04-09 00:15 IST

கோவை

கோவையில் கல்லூரி மாணவர்கள் இடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய திட்டம்

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உதவும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண் போலீசார் கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளுடன் பழகி, அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இது மாணவிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கம் ஏற்படாமல் தடுக்கவும்,அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இதில் மாணவிகளுக்கு உதவும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., கோவை கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது கல்லூரி மாணவர்கள் போதை பழக்கம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

போலீசார் நியமனம்

மேற்கண்ட கருத்துகள் அடிப்படையில் மாணவர்கள் இடையே போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஒரு கல்லூரிக்கு ஒரு போலீசார் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று மாணவர்கள் இடையே போதை பழக்கத்தில் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். மேலும் தேவைப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்.

கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் தற்போது நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கவுண்டம்பாளையத்தில் புதிதாக அமைய உள்ள போலீஸ் நிலையத்திற்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக வளாகத்தில் இடம் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கரும்புகடை மற்றும் சுந்தராபுரம் ஆகிய போலீஸ் நிலையங்கள் முதற்கட்டமாக தனியார் கட்டிடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்