காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி

காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரியை அமைச்சர் ரகுபதி, ப.சிதம்பரம் திறந்து வைத்தனர்.

Update: 2022-09-19 18:35 GMT

காரைக்குடி

காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரியை அமைச்சர் ரகுபதி, ப.சிதம்பரம் திறந்து வைத்தனர்.

சட்டக்கல்லூரி திறப்பு விழா

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலின்போது காரைக்குடியில் சட்டக்கல்லூரி நிறுவப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதன்படி காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் தற்காலிகமாக புதிய சட்டக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் திறந்து வைத்தனர். வகுப்பறை கட்டிடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து சட்டக்கல்லூரி அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதியில் காரைக்குடி தொகுதியில் சட்டக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். காரைக்குடி தொகுதிக்கு சட்டக்கல்லூரியை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அது தற்போது நிறைவேறி உள்ளது.

உயர்ந்த பதவிகள்

தமிழகத்தில் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட சட்டக்கல்லூரியுடன் சேர்த்து மொத்தம் 15 சட்டக்கல்லூரிகள் உள்ளது. இங்கு மொத்தம் 22 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர். பெண்கள் சட்டம் படிக்க வேண்டும். சட்ட கல்வி பெண்களுக்கு பாதுகாப்பானது. சட்டம் படித்தால் உயர்ந்த பதவிகளை அடையலாம். தமிழகத்தில் சட்டத்துறையில் பெண்கள் பல்வேறு உயர்ந்த பதவிகளையும், நீதிபதிகளாகவும் உள்ளனர். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு சட்ட கல்லூரியில் சேர முடியும். தற்போது சிபாரிசு என்பதற்கே இடமில்லை. மாணவர்களை விட மாணவிகள் தான் தமிழகத்தில் அதிக அளவில் பல் மருத்துவம் மற்றும் சட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-

காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பின்னர் முதல்-அமைச்சர் நேரில் வந்து புதிய சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைப்பார். சட்டம் இல்லாமல், சட்ட அறிவு இல்லாமல் எந்தவொரு காரியமும் செய்ய முடியாது. சட்டம் இல்லாமல் அரசை நடத்த முடியாது. ஆகவேதான் சட்டத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பெண்கள் தான் அதிகளவில் சட்ட படிப்பு படித்து உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள 15 சட்டக்கல்லூரிகளில் 8 கல்லூரியில் பெண்களும், 7 கல்லூரியில் ஆண்களும் முதல்வர்களாக உள்ளனர். இதை பார்க்கும் போது ஆணிற்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என தெரிகிறது. தற்போது இங்கு தற்காலிகமாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் விரைவில் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் புதிதாக கட்டிடம் 15 மாதத்திற்குள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திறந்து வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வக்கீல் நளினி சிதம்பரம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.அசோகன், முன்னாள் யூனியன் தலைவர் சுப.முத்துராமலிங்கம், நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்தலைவர் குணசேசரன், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்