பெருமாநல்லூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று பெண்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருமாநல்லூர் சந்தைக்கடையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், '1990-ம் ஆண்டு முதல் இந்த முகாமில் வசித்து வருகிறோம். வீடுகள் மிகவும் சிறியதாக இருப்பதால் மழைக்காலத்தில் சில வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுகிறது. வீடுகளின் உயரம் குறைவாக இருப்பதால் வெயில் காலத்தில் சிரமமாக உள்ளது. குடும்பம் பெரிதாகிவிட்டதால் வீடு போதுமானதாக இல்லை. கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. அனைத்து வசதிகளுடன் புதிய குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் சிறு, குறு ஆதிதிராவிடர் விசைத்தறி உரிமையாளர்கள் அளித்த மனுவில், 'விசைத்தறியாளர்களுக்கு அரசு வழங்கியதைப்போல், எங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்ய மல்டி கலர் பேனல் பாக்ஸ், பொந்து குறி செட் போன்றவற்றை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் அளித்த மனுவில், 'விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலை வடிவமைப்பு, பயன்படுத்தும் வழிமுறை, கரைப்பதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ரசாயன பொருட்களை கொண்டு தயாரிப்பதை தடுக்க வேண்டும். விதிமுறை மீறி சிலை தயாரிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
மருத்துவ உதவி
திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் அளித்த மனுவில், 'எனது 8 வயது மகன் மாற்றுத்திறனாளி ஆவார். 1 மணி நேரத்துக்கு ஒருமுறை தோல் உரியும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வாழ்வாதார மருத்துவ நிதி உதவி வேண்டி முதல்-அமைச்சருக்கு மனு கொடுத்தோம். இதைப்பார்த்து சிலர் எங்களை மிரட்டுகின்றனர். அதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
வள்ளிபுரம் பசுமைநகர் மக்கள் அளித்த மனுவில், 'நெசவாளர் குடியிருப்பு பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி ஊராட்சி செயலாளர் தெரிவித்துள்ளார். எங்கள் பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டை அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும். அதுவரை கோவில் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.