குடும்ப தகராறில் புதுமாப்பிள்ளை தற்கொலை

செம்பட்டி அருகே, மனைவிக்கு புகைப்படங்களை காதலி அனுப்பியதால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-04-02 19:00 GMT

தனியார் வங்கி ஊழியர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 33). இவர், கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றினார்.

அப்போது இவருக்கும், சென்னையில் வசித்து வந்த வந்தவாசியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் தான் பணிபுரிந்து வந்த வேலையில் இருந்து ராஜசேகரன் நின்று விட்டார். அதன்பிறகு இவர், தனது சொந்த ஊரான வீரக்கல்லுக்கு வந்து விட்டார். தற்போது இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார்.

திருமண புகைப்படங்கள்

இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ராஜசேகரனுக்கு திருமணம் நடந்தது. வீரக்கல்லை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சித்ரா (27) என்பவரை மணம் முடித்தார். தனது திருமண புகைப்படங்களை, தன்னுடைய செல்போன் 'வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில்' ராஜசேகரன் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அவருடைய காதலி அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக ராஜசேகரனிடம் அந்த பெண் கேட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் நெருக்கமாக இருந்த படங்களையும், தனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் ராஜசேகரனின் மனைவி சித்ரா மற்றும் உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் அவருடைய காதலி அனுப்பியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனை பார்த்து சித்ரா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு சித்ரா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ராஜசேகரன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைகாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்