ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.;
ஓமலூர்
ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி அமரகுந்தி கே.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான ஷாலினி (வயது 20) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலை ஷாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தொளசம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
அதன்பின்னர் ஷாலினியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷாலினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.