புதுப்பெண் அடித்துக்கொலை-கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
கடையநல்லூர் அருகே கிணற்றில் இளம்பெண் பிணமாக மிதந்த வழக்கில் துப்பு துலங்கியது. புதுப்பெண்ணான அவரை அடித்துக்கொன்று உடலை கிணற்றில் வீசியதாக கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே கிணற்றில் இளம்பெண் பிணமாக மிதந்த வழக்கில் துப்பு துலங்கியது. புதுப்பெண்ணான அவரை அடித்துக்கொன்று உடலை கிணற்றில் வீசியதாக கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக மிதந்த இளம்பெண்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கண்டமான்குளக்கரையில் உள்ள பயன்பாடற்ற தரைமட்ட கிணற்றில் கடந்த 10-ந்தேதி சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மிதந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுப்பெண் அடித்துக்கொலை
விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் வினோதினி (வயது 19) என்பது தெரியவந்தது.
திருமணமான 4 மாதங்களே ஆன புதுப்பெண்ணான அவரை கள்ளக்காதலனான கடையநல்லூர் அருகே வலசை வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் மனோ ரஞ்சித் (வயது 22) அடித்துக்கொலை செய்து, அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
தற்கொலை முயற்சி
மனோ ரஞ்சித்தும், வினோதினியும் சமூகவலைதளமான 'இன்ஸ்டாகிராம்' மூலம் அறிமுகமாகி பழகி நாளடைவில் காதலித்து வந்தனர். காதலன் மனோ ரஞ்சித் நினைவாக, வினோதினி தனது வலது கையில் 'எம்.வி.' என்று ஆங்கிலத்திலும், இதய வடிவிலும் பச்சை குத்தியிருந்தார். மேலும் அவர் அடிக்கடி வலசை கிராமத்துக்கு சென்று காதலன் மனோ ரஞ்சித்துடன் பழகி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனை அறிந்த மனோ ரஞ்சித் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் சில நாட்களில் மனோ ரஞ்சித் குணமடைந்தார். அதன்பிறகும் அவர் வினோதினியுடன் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்தார்.
கணவரை பிரிந்து...
இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு வினோதினி தனது கணவரை விட்டு பிரிந்து, கள்ளக்காதலன் மனோ ரஞ்சித்தை தேடி வலசை கிராமத்துக்கு வந்தார். பின்னர் அவர், மனோ ரஞ்சித்தின் வீட்டில் தங்கினார். அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்று வந்தனர்.
அப்போது வினோதினி இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண்களுடன் பழகியதை மனோ ரஞ்சித் அறிந்து அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வினோதினியை தீர்த்துக்கட்ட மனோ ரஞ்சித் திட்டமிட்டார். அதன்படி அவர் வலசை கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வினோதினியை அழைத்து சென்றார். அங்கு அவர், வினோதினியிடம் பல ஆண்களுடன் பழகுவதை கைவிடுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கம்பால் தாக்கினார்
அப்போது ஆத்திரமடைந்த மனோ ரஞ்சித் கம்பால் வினோதினியின் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மனோ ரஞ்சித் தனது நண்பர்களின் உதவியுடன் வினோதினியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கிச்சென்று, கண்டமான்குளக்கரையில் உள்ள பயன்பாடற்ற தரைமட்ட கிணற்றில் வீசிச்சென்று உள்ளார்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
5 பேர் கைது
இதுதொடர்பாக மனோரஞ்சித் மற்றும் அவருடைய நணபர்களும் சக பொக்லைன் ஆபரேட்டர்களுமான அதே ஊரைச் சேர்ந்த மகா பிரபு (22), பரத் (21), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மனோ ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.