புதிய எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிப்பு
புதிய எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.;
திருப்புவனம்,
கீழடியை சேர்ந்தவர் கவுதம். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கும், கிடைத்த வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு எலக்ட்ரிக் சைக்கிளை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கூறுகையில், இந்த சைக்கிளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும். இதில் லித்தியம் பேட்டரி பயன்படுத்தியிருக்கிறேன். இந்த சைக்கிள் மூலம் 20-லிருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஒரு இன்வெர்ட்டர் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டில் கரண்ட் இல்லாத போது இந்த சைக்கிளை பயன்படுத்தி மின்சாரம் எடுக்கலாம். மற்ற எலக்ட்ரிக் சைக்கிள்களுக்கும், இந்த எலக்ட்ரிக் சைக்கிளுக்கும் உள்ள வித்தியாசம் இதில் ஒரு சிறப்பான கம்ப்ரசர் உள்ளது. அது என்னவென்றால் 3 பேட்டரிகளில் உள்ள சக்தியை இந்த கம்ப்ரசர் இழுத்து ஒரே பேட்டரிக்கு கொடுக்கும் என்றார். இவருடைய புதிய கண்டுபிடிப்புக்கு பெற்றோர் அருணகிரி-கவிதா மற்றும் நண்பர்கள் உதவி செய்து வருகின்றனர். கவுதம் ஏற்கனவே எலக்ட்ரிக் ஜீப் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.