புதிய தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டும்
பந்தலூர் அருகே புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
பந்தலூர்,
பந்தலூர் அருகே புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இடித்து அகற்றம்
பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே பந்தகாப்பு ஆதிவாசி காலனியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே குடிசை வீடுகளில் வசித்தனர். கடந்த 2004-2005-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், தொகுப்பு வீடுகள் தரமாக கட்டப்படாததால், நாளடைவில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட தொடங்கியது. மேற்கூரை பெயர்ந்த நிலையில் காட்சி அளித்தன. இதனால் பழுதடைந்த வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகியது. இதுகுறித்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு கருதி பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடிக்க உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த ஆண்டு சில தொகுப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
புதிய தொகுப்பு வீடுகள்
இதனால் ஆதிவாசி மக்கள் அப்பகுதியில் குடிசைகள் அமைத்து, மேற்கூரையில் மழைநீர் ஒழுகாமல் இருக்க பிளாஸ்டிக் கொண்டு மூடினர். அந்த குடிசைகளில் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால், மழைகாலங்களில் வசிக்க முடியாத நிலை உள்ளது. மழைநீர் உள்ளே கசிவதால், ஆதிவாசி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, புதியதாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. ஓராண்டை கடந்தும் புதிய தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் குடிசைகளில் வசித்து வருகிறோம். எனவே, புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன் கூறும்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விரைவில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.