நடனபாதேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.;
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் 1600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.43 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கும், புதிதாக செய்யப்பட்ட தேருக்கும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதற்கு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன், நகர மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன், செயல் அலுவலர் மகாதேவி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிதாக செய்யப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், நகர தி.மு.க.செயலாளர் மணிவண்ணன், கோவில் கணக்கர் சரவணன், கவுன்சிலர்கள் செல்வகுமார், மலையான் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள், நகர மன்ற கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.