அறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.;

Update: 2023-10-20 18:44 GMT

புதிய பஸ் நிலையம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டார். மாநாட்டில் முதல்-அமைச்சர் கூறிய கருத்துகள் குறித்து 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பற்றி என்ன பேசப்பட்டது?

பதில்:- மாநாட்டில் ஒவ்வொரு கலெக்டர்களும் குறிப்பிட்ட நேரத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சில கேள்விகளை கேட்டார். அதற்கு பதில் அளிக்கப்பட்டது. அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. இதில் புதிய பஸ் நிலையம் அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி தெரிவிக்கப்பட்டது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின் விரைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

அறிவுரைகள்

கேள்வி:- மாநாட்டில் சொல்லப்பட்ட முக்கியமான அறிவுரைகள் என்ன?

பதில்:- அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதிைய பேண வேண்டும். சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தீர்க்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள கூறினார்.

கேள்வி:- முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் மக்களை சந்திக்க பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்படுகிறதா?

பதில்:- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடம் நேரில் மனு பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர மற்ற நாட்களில் மக்கள் மனு கொடுக்க வந்தாலும் அவர்களை பார்த்து மனு வாங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களிடம் அவர்களது கோரிக்கை மனுக்கள் வாங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர சிறப்பு முகாம்களிலும் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை கேட்கப்படுகிறது.

சிறப்பு திட்டங்கள்

கேள்வி:- மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்பட சிறப்பு திட்டங்களில் செயலாக்கம் நமது மாவட்டத்தில் எப்படி உள்ளது?

பதில்:- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்து மடலும் அனுப்பப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்க தனி வசதி ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மனு கொடுக்க வருபவர்கள் பதிவு செய்ய தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா?

பதில்:- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதில் நமது மாவட்டம் குறிப்பிட இடங்களுக்குள் இருக்கிறது. இதனை மேலும் அதிகரிக்க பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமும், ஆசிரியர்கள் மூலம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசு விடுதிகள்

கேள்வி:- மாணவர்களுக்கான அரசு விடுதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

பதில்:- மாவட்டத்தில் அரசு விடுதிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது பற்றி அறிவிப்பு எதுவும் உள்ளதா?

பதில்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்