நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவிக்கு நவீன இதய சிகிச்சை
மாரடைப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் நவீன இதய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி சாதனை புரிந்தனர்.;
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு பார்வைத்திறனும் குறைந்தது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
கடந்த 7-ந்தேதி இரவில் மாணவிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு கடுமையாக சிரமப்பட்ட அவரை உடனே சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
இங்கு மாணவிக்கு 'கேத் லேப்' எனும் நவீன ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்தனர்.
ரத்த குழாயில் அடைப்பு
இதில் இதயத்துக்கு ெசல்லும் ரத்த குழாய்களில் கடுமையான அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக மாணவிக்கு டாக்டர்கள் குழுவினர் நவீன இதய சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இதுகுறித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி பாலன்கூறியதாவது:-
2 'கேத் லேப்' கொண்ட அரசு ஆஸ்பத்திரி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சிகிச்சைகளும் சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதய சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் 'கேத் லேப்' எனும் நவீன ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியானது 2 'கேத் லேப்' கொண்ட ஒரே ஆஸ்பத்திரியாக திகழ்கிறது.
அறிகுறியின்றி மாரடைப்பு
சம்பவத்தன்று நள்ளிரவு 1.55 மணிக்கு மாரடைப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிளஸ்-2 மாணவியை சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்தனர். அவருக்கு பரிசோதனை செய்து மாணவியின் அவசர சிகிச்சை தேவை குறித்து எனக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இதயவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மருத்துவ குழுவினர் சிறிது நேரத்தில் மாணவிக்கு நவீன இதய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார்கள்.
17 வயது மாணவிக்கு எந்தவித அறிகுறியும் இன்றி முதன் முறையாக இத்தகைய மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது ஒரு அபூர்வமான சம்பவம் ஆகும். இதற்குரிய காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த மாணவி ஆரோக்கியமாக இருக்கிறார். சீராக மூச்சு விடுகிறார், கண் பார்வை நன்றாக உள்ளது. ஓரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார். இதய சிகிச்சையில் புதிய சாதனை படைத்த டாக்டர்கள் குழுவை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன இதய சிகிச்சை
இதுகுறித்து இதயவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் கூறுகையில், ''மாணவிக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது. அப்போது மாரடைப்பை குறைக்கக்கூடிய மருந்தை செலுத்தினால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்து உருவாகும். எனவே, உடனடியாக 'பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி' எனப்படும் நவீன இதய சிகிச்சை செய்து உள்ளோம். இனி மாணவி வழக்கம்போல் செயல்படலாம்.
17 வயது மாணவிக்கு இத்தகைய சிகிச்சை இந்தியாவில் எங்கேயும் அளித்தது கிடையாது. உலக நாடுகளில் எங்கேனும் செய்யப்பட்டு உள்ளதா? என்று கேட்கப்பட்டு உள்ளது'' என்றார். பேராசிரியர் அருள், டாக்டர்கள் மணிகண்டன், முகமது ரபீக், சரவணன், செல்வகுமரன், ஆண்டோ, திருலோக சந்தர், விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.